இந்திய தபால் துறை, வங்கி செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து, வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வங்கிச் சேவைகளை வழங்கவுள்ளது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கி மற்றும் நிதி துறையில் டிஜிட்டல் முறைகளை ஊக்குவிக்கும் விதமாக, தபால் துறை வங்கிகளில் வாட்ஸ் அப் சேவை வழங்கப்படுகிறது. மேலும், இந்தியாவின் பல மொழிகளில் இந்த சேவை வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த மொழிகளில் வங்கிச் சேவையை பெறுவதால், கிராமப்புற மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே, எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் சேவைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், வாட்ஸ்அப் சேவை புதிதாக வழங்கப்படுகிறது. 24 X 7 முறையில் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டம், வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.














