சிரியாவில், அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர் ஐரோப்பாவில் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நேற்று, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளது. “காலித் அய்த் அகமத் அல் ஜபரி என்பவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர்களுள் மிக முக்கியமானவராவார். மேலும், மத்திய கிழக்கு நாடுகளை தாண்டி ஐரோப்பாவில் இவர் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார். சிரியாவில் நடத்தப்பட்ட அமெரிக்காவின் தனிப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில், இவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த திட்டத்தில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு நேரவில்லை” - இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளதால், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியுள்ளதாக கருதப்படுகிறது.