ஓபன் ஏஐ நிறுவனம், சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் தோற்றுனர் சாம் ஆல்ட்மேன், ஜப்பான் அதிபர் புமியோ கிஷிடாவை சந்தித்து பேசி உள்ளார். அதன் பின்னர், அவர் அளித்துள்ள தகவலின் படி, ஜப்பானில் ஓபன் ஏஐ நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஜப்பானிய மொழிகளில் சேவைகளை வழங்க முக்கிய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
சந்திப்பிற்குப் பிறகு பேசிய ஆல்ட்மேன், “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஜப்பான் மக்கள் கிரகித்துக் கொண்ட விதம் ஆச்சரியம் அளிக்கிறது. மேலும், இந்த தொழில்நுட்பத்தை மக்களுக்கு பயனுள்ளதாக அமைக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்து அதிபர் கிஷிடா உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விரைவில் ஜப்பான் கலாச்சாரத்திற்கு ஏற்றபடி புதிய தொழில்நுட்பம் அறிமுகம் ஆகும்” என்று கூறியுள்ளார்.