உயர்ரக பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் டப்பர்வேர் நிறுவனம், தனது வர்த்தகத்தில் இருந்து வெளியேற உள்ளதாக கூறியுள்ளது. ஒரு நிறுவனமாக தொடர்ந்து செயல்படுவதற்கான வலிமை கேள்விக்குறியாகி உள்ளதாக, தெரிவித்துள்ள டப்பர்வேர் நிறுவனம், நிதிச் சூழல் காரணமாக விலகுவதாக தெரிவித்துள்ளது.
டப்பர்வேர் நிறுவனம் உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கண்டெய்னர்கள் தயாரித்து வருகிறது. உலகின் 70 நாடுகளில் டப்பர்வேர் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக, பொது முடக்கம் காரணமாக இந்த நிறுவனத்தின் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. டப்பர்வேர் நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாபம் பெருமளவு சரிந்துள்ள நிலையில், நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்கு நிதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, மிகப்பெரிய கடனில் நிறுவனம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது குறித்து பல்வேறு நிதி ஆலோசகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டப்பர்வேர் தெரிவித்துள்ளது. எனினும், வர்த்தகத்தில் இருந்து வெளியேறுவதற்கே அதிக சாத்தியம் உள்ளதாக கூறியுள்ளது.