அசாம் மாநிலத்தில் 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கரில் பாமாயில் மரங்கள் வளர்ப்பதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
அசாம் மாநில வேளாண் துறை தகவலின்படி, 6 பாமாயில் ஆலைகள் அமைப்பற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் 3 தொழிற்சாலைகளை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. 2025-2026ம் ஆண்டுக்குள் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பாமாயில் மரங்கள் வளர்ப்பதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பாமாயில் மரங்களை வளர்ப்பதற்காக 18 மாவட்டங்களில் விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை தேர்வு செய்யும் பணியில் பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் மாவட்ட வேளாண் அலுவலகங்கள் ஈடுபடும் என்றார்.
அசாமில் உள்ள எண்ணெய் மரங்களின் வளர்ப்பானது மழைநீரினால் மட்டுமே சாத்தியமாகும் என்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக பாமாயில் தேவைக்காக இதர நாடுகளை நம்பி இருக்கும் நிலை குறையும். பாமாயில் மரம் என்று அழைக்கப்படும் எண்ணெய் பனையானது பனை மர குடும்பத்தை சேர்ந்த ஒரு வகையாகும். இது மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது என்று அவர் கூறினார்.














