சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் ஆகியவற்றுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் காரணமாக அங்கு கடந்த வாரம் வன்முறை வெடித்தது. இதில், இரு தரப்பிலும் இழப்புகள் நேர்ந்தன. அதுமட்டுமின்றி, அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சூடானில் வசித்து வரும் வெளிநாட்டினர் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக, செவ்வாய் கிழமை தொடங்கி, 3 நாட்கள் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. எனினும், ஒப்பந்தத்தை மீறி, ஆங்காங்கே இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, டார்பர் மாகாணத்தில் வன்முறை மோதல் ஏற்பட்டு, ஜனேனா நகரத்தின் முக்கிய சந்தைப் பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது. ஒப்பந்தத்தை மீறிய இந்த மோதலில், பல அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி, இரு தரப்பினருக்கும் இடையிலான மோதலில் சிக்கி உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 559 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.