இந்தியாவில் பல்லாயிரக்கணக்கோர் மத்தியில் மிகவும் பிரபலமாகவும், அதிகமாக விளையாடப்பட்ட வீடியோ கேம் ஆகவும், பப்ஜி இருந்தது. சீனாவை சேர்ந்த இந்த செயலியில், பாதுகாப்பு சார்ந்த மற்றும் அடிக்சன் சார்ந்த சிக்கல்கள் இருந்ததால், கடந்த 2020 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பிறகு, தென்கொரியாவை சேர்ந்த கிராஃப்டான் நிறுவனம் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா (பி ஜி எம் ஐ) என்ற புதிய வீடியோ கேமை கடந்த 2021 ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்தது. இது 'இந்தியாவின் பப்ஜி' என்று புகழப்பட்டது. பப்ஜியைப் போலவே இதிலும் பாதுகாப்பு மற்றும் அடிக்சன் சார்ந்த சிக்கல்கள் எழுந்ததால், கடந்த 2022 ஜூன் மாதம் இந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கிராஃப்டான் நிறுவனம், பி ஜி எம் ஐ வீடியோ கேமை இந்தியாவில் மீண்டும் கொண்டு வருவதற்கு தொடர் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அதன்படி, "தற்போது இந்திய செயல்பாடுகளை தொடங்க அனுமதித்த இந்திய அதிகாரிகளுக்கு நன்றி" என செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, விரைவில் இந்தியாவின் பப்ஜி என்று அழைக்கப்படும் பி ஜி எம் ஐ வீடியோ கேம் விரைவில் வெளியாகும் என்று கருதப்படுகிறது.