மழை காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்ட மக்களின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பது சுற்றுலா மற்றும் தேயிலை ஆகும். அங்கு சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை விவசாயம் நடைபெற்று வருகிறது. தேயிலைக்கு அடுத்ததாக கேரட், உருளைகிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ் போன்ற மலைகாய்கறிகள் அதிகளவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விளைவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக ஊட்டி, குந்தா, கூடலூர் தாலுகாகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது.
கூட்டுறவு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் பல ஆயிரம் கிலோ பசுந்தேயிலை வருகிறது. தனியார் தொழிற்சாலைகளில் தரமான பசுந்தேயிலை மட்டுமே வாங்கப்படுகிறது. இந்நிலையில் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. ஆனால் அவற்றை பறிக்க போதுமான ஆட்கள் கிடைப்பதில்லை.
தேயிலை தோட்டங்களுக்கு வேலை சென்று வந்த தொழிலாளர்கள் தற்போது அதிக ஊதியம் கிடைக்கும் கட்டுமான வேலை மற்றும் காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். இதனால், பசுமையான இலைகள் தேயிலை செடிகளிலேயே வீணாகிறது. மகசூல் அதிகரித்தும், இலை பறிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.