சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம் முதல் பயணத்தை தொடங்கியுள்ளது.
சீனாவின் வணிக விமான கழகத்தால் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 2017-ம் ஆண்டு சி-919 என்ற விமானம் உருவாக்கப்பட்டது. இந்த சி-919 விமானம் உயர் வெப்பநிலை, அதிக ஈரப்பதம், காற்று மற்றும் உறைபனி உள்ளிட்ட பல்வேறு இயற்கை சூழல்களில் சோதிக்கப்பட்டு வெற்றியடைந்தது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் சிவில் விமான நிர்வாகத்தால் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த விமானம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனா கிழக்கு ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் சி-919 விமானம் நேற்று தனது முதல் வணிக பயணத்தை தொடங்கியது. சுமார் 130 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் ஷாங்காயில் இருந்து அதன் தலைநகரான பீஜிங்குக்கு சென்றடைந்தது. இந்த உள்நாட்டு தயாரிப்பு விமானம் மூலம் சர்வதேச சிவில் விமான சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் போயிங், ஏர்பஸ் போன்ற நிறுவனங்களுக்கு சீனா போட்டியை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.