ஹாங்காங்கின் 2வது பெரிய ஜனநாயக கட்சியாக குடிமை கட்சி அறியப்படுகிறது. இந்தக் கட்சியின் தலைவர் ஆலன் லியோங், கட்சியை கலைப்பதாக சனிக்கிழமை அறிவித்துள்ளார். கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க யாருமே முன்வரவில்லை என்பதால், கட்சி கலைக்கப்படுவதாக கூறியுள்ளார். இதனால், ஹாங்காங்கில் ஜனநாயக இயக்கத்திற்கு மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே, ஹாங்காங்கில் வசிக்கும் ஜனநாயக ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கடந்த 1997 ஆம் ஆண்டு, ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, ஹாங்காங்கின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதாக சீனா உறுதியளித்தது. எனினும், அதனை மீறி, ஒடுக்கு முறை போக்கை கடைப்பிடித்து வந்தது. எனவே, ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தில் களமிறங்கினர். 3 ஆண்டுகளுக்கு முன்னர், ஹாங்காங்கில் உச்சம் தொட்ட ஜனநாயக போராட்டம், கொரோனா காரணமாக ஒடுங்கியது. இந்நிலையில், ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமல்படுத்தியது. அதன்படி, ஜனநாயக ஆதரவு கட்சிகள், ஊடகங்கள், அமைப்புகள் ஆகியவை கலைக்கப்பட்டு வருகின்றன. அதன் பகுதியாக, குடிமை கட்சியும் கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.