பிரிட்டனின் புதிய உள்துறைச் செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்குரைஞர் சூயலா பிரவேர்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டனின் உள்துறைச் செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி பட்டேல் பதவி வகித்து வந்தார். தற்போது, பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள லிஸ் ட்ரஸ், மற்றொரு இந்தியரான சூயலா பிரவேர்மனை உள்துறை செயலாளராக நியமித்துள்ளார். இது குறித்து சூயலா ட்விட்டரில் தனது மகிழ்ச்சியைப் பதிவிட்டுள்ளார். மேலும், பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றுவதில் பெருமை கொள்வதாகவும், தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை சூயலா பிரிட்டனின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அட்டர்னி ஜெனரல் குழுவில் அவருடன் இணைந்து பணியாற்றியவர்களுக்கு, ட்விட்டர் மூலம் நன்றி மற்றும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம், கன்சர்வேட்டிவ் கட்சியின் பார்ஹம் தொகுதியின் எம்பி யாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது முதல் அவரது பயணம் தொடங்கியது. பின்னர், 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை பிரிட்டனின் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். தற்போது, பிரிட்டனின் உள்துறைச் செயலாளராக முன்னேறியுள்ளார். பிரிட்டனில், தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது கவனிக்கத்தக்கது.