ஒரு முருங்கைக்காய் விலை மதுரையில் ரூ.25-க்கு விற்பனையானது.
காய்கறிகள் விலை தற்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.50 முதல் ரூ.60, பாகற்காய் ரூ.50 முதல் ரூ. 60, பீன்ஸ் ரூ.60, அவரை ரூ.80 முதல் ரூ.90, சின்ன வெங்காயம் ரூ.75, தக்காளி ரூ.15 முதல் ரூ.30, கேரட் ரூ.40, பட்டர் பீன்ஸ் ரூ.100 முதல் ரூ.110, பீட்ரூட் ரூ.40, சிறிய பாகற்காய் ரூ.150 போன்ற விலையில் விற்பனையாகிறது. இதில், முருங்கைக்காய் விலை கிலோ ரூ.120-க்கு விற்கிறது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முருங்கைக்காய் ரூ.20 முதல் ரூ. 25-க்கு விற்கிறது. கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.80-க்கு விற்ற நிலையில் தற்போது திடீரென விலை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து முருங்கைக்காய் வியாபாரிகள் கூறுகையில், ‘‘கடந்த மார்ச்சில் தொடங்கிய முருங்கைக்காய் சீசன் தற்போது முடியப் போகிறது. அதனால், மகசூல் குறைந்துள்ளது. அத்துடன் தற்போது கோடை வெயிலும், மழையும் மாறி மாறி பெய்ததால் சீசன் முடியும் தருவாயில் முருங்கைக்காய் வரத்து அடியோடு குறைந்து விட்டது. அதனால், விலை உயர்ந்துள்ளது. மேலும் விலை அதிகரிக்கலாம் என்று கூறியுள்ளனர்.














