உலக நாடுகளுக்கு பயனளிக்கும் வகையில், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில், ராக்கெட்டுகளைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.
பெங்களூரூவில் நடைபெற்ற ஏழாவது விண்வெளி கண்காட்சியில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் சோம்நாத், இந்த அறிவிப்பை வெளியிட்டார். நிகழ்வில் பேசிய அவர், "இன்றைய நிலையில், ஒரு கிலோ எடை உள்ள செயற்கைக்கோளை, ஒருமுறை விண்ணில் செலுத்துவதற்கு 10000 முதல் 15000 அமெரிக்க டாலர்கள் செலவிடப்படுகிறது. இதனை 5000 டாலர்களுக்குள் சுருக்க வேண்டும். முடிந்தால் ஒரு கிலோவிற்கு 1000 அமெரிக்க டாலர்கள் என்ற மதிப்பில் செலவைக் குறைக்க வேண்டும். இதற்கான ஒரே வழி - மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தை உருவாக்குவது தான்” என்று கூறினார்.
தற்போதைய நிலையில், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான ராக்கெட் தொழில்நுட்பம் உருவாக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “ஜிஎஸ்எல்வி எம்கே 3 திட்டத்திற்குப் பின்னர், இந்த முயற்சியில் இஸ்ரோ இறங்கும்” என்று கூறினார். மேலும், “இது இஸ்ரோவின் இலக்காக மட்டுமல்லாது, ஒரு துறையின் இலக்காக இருக்க வேண்டும். எனவே, நாங்கள், இந்த துறை சார்ந்த நிறுவனங்களுடன் இணைந்து, இதற்கான தொழில்நுட்பத்தை வடிவமைத்து, உற்பத்தி செய்து, செயல்படுத்த இருக்கிறோம்” என்றார். “அண்மையில், ஐஏடி (IAD) எனப்படும் புதிய தொழில்நுட்பம் பரிசோதனை செய்யப்பட்டது. அதனை இந்த ராக்கெட் வடிவமைப்பில் பயன்படுத்த உள்ளோம். தற்போதைய தொழில்நுட்பத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட தளம் ஆகும். அடுத்த சில மாதங்களில் இதற்கான முயற்சிகளில் இஸ்ரோ இறங்கும். அடுத்து சில வருடங்களில் இந்த தொழில்நுட்பம் சாத்தியமாகும்” என்று தெரிவித்தார். இதன் மூலம், உலக நாடுகளுக்கு செயற்கைகோள் ஏவும் செலவுகள் பன்மடங்கு குறையும் என்று அவர் உறுதியளித்தார்.