உணவகங்களில் கொடுக்கப்படும் மெனுகார்ட் எனப்படும் உணவு அட்டையில், ஒவ்வொரு உணவிற்கும், அதிலுள்ள கலோரி அளவு குறிப்பிட வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020 நவம்பர் மாதத்தில், இந்த அறிவிப்பு வெளியானது. இதனைச் செயல்படுத்த 2022 ஜனவரி 1ம் தேதி வரை உணவகங்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. பின்னர், ஜூலை 1 ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தற்போது, அதனை உடனடியாகச் செயல்படுத்த உணவகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், பல உணவகங்கள் கூடுதல் அவகாசம் கோரியுள்ளன.
இது குறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரி இனோசி ஷர்மா கூறுகையில், “மக்களின் நலன் கருதி இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆரோக்கியமே வாழ்வின் வளம். எனவே, மக்கள் தாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பதை அறிந்து உண்ண வேண்டும். நாம் ஆடை, அணிகலன்கள் வாங்கும் பொழுது, அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு வாங்குகிறோம். அதைப் போல, உணவகத்தில் உணவு உண்ணும் பொழுது, அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு உண்ண வேண்டும்” என்றார். மேலும், “முதற்கட்டமாக பெரிய உணவகங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவது உறுதி செய்யப்படும். தொடர்ந்து, அனைத்து உணவகங்களிலும் இந்த நடைமுறை உறுதி செய்யப்படும்” என்று கூறினார்.
அதிகரித்து காணப்படும் உடல் பருமன் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், இந்த நடைமுறையை ஏற்கனவே பின்பற்றி வருகின்றன. குறிப்பாக, இங்கிலாந்து மக்கள் தொகையில், மூன்றில் இரண்டு பங்கு பேர் உடல் பருமனாக இருப்பது ஆய்வில் தெரிய வந்ததால், அந்நாடு இந்த திட்டத்தை முன்னெடுத்து செயல்படுத்தியது. தற்போது, இந்தியாவிலும் இந்த நடைமுறை செயல் படுத்தப் படுகிறது.