கடந்த மே மாதத்தில், இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் மைனஸ் 3.48% ஆக பதிவாகியுள்ளது. இது, கடந்த 3 வருடங்களில் பதிவாகும் மிகக் குறைந்த பணவீக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தொடர்ச்சியாக இரு மாதங்களாக, மைனஸ் விகிதத்தில் மொத்த விலை பணவீக்கம் பதிவாகி வருகிறது. முன்னதாக, கடந்த ஏப்ரலில் மைனஸ் 0.92% ஆக மொத்த விலை பணவீக்கம் பதிவாகி இருந்தது. இதற்கு முன்னர், கடந்த 2020 மே மாதத்தில் மைனஸ் 3.37% ஆக பதிவான பணவீக்கமே, குறைந்த அளவு மொத்த விலை பணவீக்கம் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்த விலை பணவீக்கம் சரிவடைந்ததன் காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சரிவடைந்துள்ளன. அத்துடன், எரிசக்தி துறை மொத்த விலை பணவீக்கம் மைனஸ் 9.17% ஆகவும், உற்பத்தி துறை மொத்த விலை பணவீக்கம் மைனஸ் 2.97% ஆகவும் பதிவாகியுள்ளது. அதே வேளையில், மே மாத சில்லறை பணவீக்கம் 2 ஆண்டு குறைவான பதிவை பதிவு செய்துள்ளதால், பொருளாதார அடிப்படையில் ஏற்றம் பதிவாகும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.