பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின்பேரில் 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை அங்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடி, தனது அமெரிக்க பயணத்துக்காக நாளை 20-ந் தேதி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நியூயார்க் நகருக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கு 21-ந் தேதியன்று ஐ.நா. தலைமையகத்தில் நடக்கிற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்துக்கு அவர் தலைமை தாங்கி சிறப்பிக்கிறார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, தலைநகர் வாஷிங்டன் புறப்படுகிறார். அங்கு 22-ந் தேதி அவருக்கு வெள்ளை மாளிகையில் அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஜனாதிபதி ஜோ பைடனுடன் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
வாஷிங்டனில் இருந்து பிரதமர் மோடி புறப்படுவதற்கு முன்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 அமெரிக்க வாழ் இந்தியர்களை 23-ந் தேதியன்று, வாஷிங்டன் ரொனால்டு ரீகன் கட்டிடத்தில் சந்தித்து பேசுகிறார்.அமெரிக்க நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 24, 25-ந் தேதிகளில் எகிப்து நாட்டில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.