தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள கிராமத்தில், 1000 ஆண்டு பழமையான சமண சமய சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள இனிகாப்பள்ளி கிராமத்தில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. சமண சமய குருக்களான ஆதிநாத், பார்சுவநாதா, நேமிநாத், வர்த்தமன மகாவீரர் ஆகியோரது சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் தியானத்தில் அமர்ந்திருப்பது போன்ற வகையில் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. அத்துடன், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. மேலும், இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தூண்களில் ஒன்று கிரானைட் கல்லாலும், மற்றொன்று கருப்பு பாசால்ட் கல்லாலும் ஆனவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு, இந்த பகுதியில் சமண மதம் தழைத்தோங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், 1000 ஆண்டுகளுக்கு முன்பு சிலுக்கூர் அருகே சமண சமய கோவில் இருந்ததாக கூறப்படுகிறது. அதே இடத்தில் தற்போது பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இதே போன்று, ஹைதராபாத்தில் இருந்து 77 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோலனுபாகா கிராமத்தில் உள்ள சமணக் கோயில் 2000 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது. அந்த வகையில், தற்போது கிடைத்துள்ள சிற்பங்கள், பழங்கால சமண சமயம் குறித்த ஆதாரங்களை உறுதி செய்வதாக அமைந்துள்ளன.