தமிழகத்தில் பேருந்துகளின் வருகை, புறப்பாடு தகவலை செல்போன் செயலி மூலம் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் எந்தெந்த நிறுத்தத்துக்கு எப்போது வரும். அங்கிருந்து எப்போது புறப்படும் என்ற தகவலை வழங்குவதற்காக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இந்த தகவல்களை செல்போன் செயலி மூலம் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உள்பட தமிழகத்தில் உள்ள 7 போக்குவரத்து கழகங்கள் டெண்டர் விட்டுள்ளன.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விழுப்புரம், கும்பகோணம், திருநெல்வேலி, சேலம், கோவை, மதுரை ஆகிய 7 போக்குவரத்து கழகங்களில் பேருந்து நிறுத்தத்துக்கு பேருந்துகள் வரும் நேரம், அங்கிருந்து புறப்படும் நேரம் ஆகியவை செல்போன் செயலி மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்படும். இது அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள், பேருந்து வழித் தடங்களில் பேருந்துகளின் வருகை, புறப்படும் நேரம் பற்றிய தற்போதைய போக்குவரத்து தகவல்களை வழங்கும்.














