வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்ந்த 48 சேவைகளை இணைய வழியில் பெற்றுக்கொள்ளலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இனி தமிழகம் முழுவதும் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், 54 வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் தங்களது சேவைகளை இணைய வழியில் பெற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல் கட்டமாக ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம், பழகுனர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட ஆறு சேவைகள் முற்றிலுமாக இணைய வழியில் கொண்டுவரப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.
மேலும் நகல் பழகுநர் உரிமம், நகல் ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமத்தில் பெயர் மாற்றம், பன்னாட்டு ஓட்டுநர் உரிமம், வாகனத்துக்கான தற்காலிக பதிவெண், அனுமதி சீட்டில் பெயர் மாற்றம் போன்ற 25 சேவைகள் முற்றிலுமாக இணைய வழியில் மட்டுமே பெற முடியும். மீதமுள்ள சேவைகளை இணையவழியில் கொண்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.சேவைகளை https://tnsta.gov.in/ இணையத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும். விவரங்கள் மாறுபட்டு இருந்தால் சேவை பெற இயலாது எனவும் தெரிவித்துள்ளனர்.