பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகவும் நெருக்கமானவர் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆவார். அவர் தற்போது ரகசிய காப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷா மஹ்மூத் குரேஷி வெளியுறவு அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது, அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய அதிகாரப்பூர்வ தகவலின் ரகசியத்தை காக்க தவறினார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதன் பெயரில் சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் மத்திய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து, நேற்று நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையில் குரேஷியை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த குரேஷி, அவர் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். ஆனால், கசிந்ததாக கூறப்படும் தகவலை அடிப்படையாகக் கொண்டே இம்ரான் கான் வெளிநாட்டு சதி நடைபெறுவதாக கூறியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி, ரகசிய காப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளார். எனவே, பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.