கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி, ஓலா நிறுவனம், தனது தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்த, 200 மென் பொறியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த தகவல் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு டவுன்ஹால் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டனர். ஆனால், தற்போது, இந்த முடிவை ஓலா நிறுவனம் ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஓலா நிறுவனம், அண்மையில், பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை, உணவு மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட பல வர்த்தகங்களை நிறுத்தியது. இதன் தொடர்பாக சுமார் 1000 பணியாளர்களை ஏற்கனவே பணிநீக்கம் செய்துள்ளது. மேலும், ஓலா நிறுவனம் தயாரித்த மின்சார ஸ்கூட்டர் வாகனம் தீப்பிடித்து எரிந்ததால், ஓலா நிறுவனத்தின் மிகப்பெரிய வர்த்தகமாகக் கருதப்பட்ட மின்சார வாகன விற்பனையும் பெருமளவு சரிவைச் சந்தித்துள்ளது. இந்த தொடர் சரிவு காரணமாக, ஊழியர்களின் பணிநீக்கமும் ஏற்படும் என்று கருதப்பட்டது.
ஆனால், வரும் 2024 ஆம் ஆண்டு, ஓலா நிறுவனம், மின்சார கார்களை அறிமுகப்படுத்த உள்ளது என்றும், மின்சார வாகனங்களுக்கான லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியையும் நிறுவனமே மேற்கொள்ள இருக்கிறது என்றும் கடந்த மாதத்தில் அறிவிப்புகள் வெளியாகின. மேலும், அடுத்த 18 மாதங்களில் மின்சார கார்கள் தயாரிப்பு மற்றும் பேட்டரி உற்பத்தி உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்த உள்ளதாக ஓலா நிறுவனம் கூறியுள்ளது. அதற்காக, 5000 பொறியாளர்களை பணி அமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. எனவே, முன்னதாக வெளியிடப்பட்ட பணி நீக்க அறிவிப்பை நிறுவனம் ரத்து செய்துள்ளது.














