டிஸ்னி நிறுவனம் தனது இந்திய வர்த்தகத்தை ரிலையன்ஸ் ஜியோ அல்லது அதானி குடும்பத்திடம் ஒப்படைக்க உள்ளதாக, அண்மையில் தகவல் வெளியானது. இது குறித்து பேசிய டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாப் இகர், டிஸ்னி நிறுவனம் தனது இந்திய வர்த்தகத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். எனவே, ஹாட்ஸ்டார் வர்த்தகத்தை விற்கும் எண்ணம் இல்லை என தெளிவாக விளக்கமளித்துள்ளார்.
“இந்தியாவைப் பொறுத்தவரை, டிஸ்னி நிறுவனத்தின் வர்த்தகம் நல்ல முறையில் இயங்கி வருகிறது. கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. குறிப்பாக, கடந்த காலாண்டில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் 37.6 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட சற்று குறைவுதான். ஆனால், தற்போதைய நிலையில், இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது என்பதால், எங்கள் வர்த்தகத்தை மேலும் வலிமையாக்க விரும்புகிறோம். இந்திய வர்த்தகத்தை விற்கும் எண்ணம் இல்லை” - இவ்வாறு பாப் இகர் தெரிவித்துள்ளார்.