ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று இந்தியா கனடா அணிகள் மோதுகின்றன.
சிலி தலைநகர் சாண்டியாகோ நகரில் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடங்குகிறது. இந்த போட்டி டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆன நெதர்லாந்து, தென்கொரியா, ஜெர்மனி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அர்ஜென்டினா உட்பட 16 அணிகள் பங்கேற்க உள்ளன. இவை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவின் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி காலிறுதிக்கு முன்னேறும். இதில் இந்திய அணி சி பிரிவில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஜெர்மனி, பெல்ஜியம், கனடா ஆகியவை இதே பிரிவில் உள்ள மற்ற அணிகள் ஆகும். இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் இந்தியா கனடா அணியுடன் மோத உள்ளது. மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜூனியர் கோப்பையை வென்றிருக்கும் இந்திய அணி, கனடாவிற்கு எதிரான முந்தைய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியானது இன்று இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது.