மலர்களும் தமிழர்களும்

மலர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இணைப் பிரியாத உறவு உண்டு. சங்க காலத்தில் இருந்தே தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றியது மலர்களாகும். மனிதர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை பல நிலைகளில் தமிழர்களின் முக்கிய அங்கமாக மலர்கள் இருக்கின்றன. மேலும், தமிழர் வாழ்வில் மலர்கள் ஒரு அடையாளமாகவே பார்க்கப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு அடையாளம் இருப்பது வழக்கம். ஆனால், தமிழகத்தில் ஒவ்வொரு அரச வம்சமும் ஒவ்வொரு மலரைத் தங்கள் அடையாளமாய்த் தரித்திருந்தனர். பாண்டிய மன்னர்கள் வேப்பம்பூவையும், சேர அரசர்கள் பனம்பூவையும், […]

மலர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இணைப் பிரியாத உறவு உண்டு. சங்க காலத்தில் இருந்தே தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றியது மலர்களாகும். மனிதர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை பல நிலைகளில் தமிழர்களின் முக்கிய அங்கமாக மலர்கள் இருக்கின்றன. மேலும், தமிழர் வாழ்வில் மலர்கள் ஒரு அடையாளமாகவே பார்க்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு அடையாளம் இருப்பது வழக்கம். ஆனால், தமிழகத்தில் ஒவ்வொரு அரச வம்சமும் ஒவ்வொரு மலரைத் தங்கள் அடையாளமாய்த் தரித்திருந்தனர். பாண்டிய மன்னர்கள் வேப்பம்பூவையும், சேர அரசர்கள் பனம்பூவையும், சோழ வேந்தர்கள் அத்திப்பூவையும் அணியும் வழக்கம் கொண்டிருந்தனர். மூவேந்தர்களும் தங்களுக்கிடையே வேறுபாடு தெரிவதற்காக, இந்த மலர்களைச் சூடிக்கொண்டார்கள் என்பதைத்

தொல்காப்பியம்:

“வேந்து இடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்ப்
போந்தை, வேம்பே ஆர் என வரூஉம்
மாபெரும் தானையர் மலைந்த பூவும்”

என்ற பாடல் மூலம் விளக்குகிறது. கோவூர்கிழார் எழுதிய 'இரும்பனை வெண்தோடு’ எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலும் இதனை உறுதி செய்கிறது.

பல நூற்றாண்டுகளாகவே பூக்கள் தமிழர்களின் நுகர்ப் பொருளாக இருந்துள்ளன. பூக்களை விற்பவர்களைப் பற்றியக் குறிப்புகள் நற்றிணையில் இடம்பெறுகிறது. மேலும் குறிஞ்சிப் பாட்டு 99 மலர்களை அறிமுகப்படுத்துகிறது. புவி அமைப்பு காரணமாக ஒவ்வொரு நிலப்பரப்பிலும் ஒவ்வொரு மலர்கள் பூத்தன. இதனை அகப்பொருள் திணைகள் மூலமாகச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்கின்றன.

ஒவ்வொரு நிலத்திற்குரிய மலர்களாக அகப்பொருள் விளக்கம் கூறுவன:

குறிஞ்சி நிலம் - வேங்கைப்பூ, காந்தள் பூ
முல்லைநிலம் - குல்லைப்பூ, முல்லைப்பூ, தோன்றிப்பூ, பிடவம்பூ
மருதநிலம் - தாமரை பூ, கழுநீர்ப்பூ, குவளைப்பூ
நெய்தல் நிலம் - நெய்தல்பூ, தாழம்பூ,முண்டகப்பூ, அடம்பம் பூ
பாலை நிலம் - குராம்பூ, மராம்பூ

தமிழ் வழக்கத்தில், ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு மலரை அடையாளப் படுத்தினர். தமிழர் வாழ்வில் இறை வழிபாடு முதல் இறுதிச் சடங்கு வரை அனைத்திலும் நறுமணம் கொண்ட மலர்களின் அணிவகுப்பே நிகழ்ந்து வருகிறது. நறுமண சிகிச்சை என்பது இன்றைய விஞ்ஞான மருத்துவம்; ஆனால் பண்டைத் தமிழர் இதனை அறிந்திருந்தனர். ஆகவே தான், ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு மலரை அணியும் வழக்கம் கொண்டனர். நிகழ்வின் தன்மைக்கேற்ப, மலரின் மணமும் மனிதர்களின் மனதினை ஒழுங்குப் படுத்தின. நறுமணம் கொண்ட மலர்களின் சிறப்பை ‘‘நாற்றமிலாத மலரின் அழகு இன்னா’’ என்கின்றது இன்னா நாற்பது.

போரின் ஒவ்வொரு நிகழ்விலும், ஒவ்வொரு மலர் சூடும் வழக்கம் இருந்துள்ளது.

வெட்சி - ஆனிரை கவர்தலின் பொழுது அணிவது
கரந்தை - ஆநிரையை மீட்கச் செல்லும் பொது அணிவது

இதற்கான சான்றாக வெட்சி சூடி ஆனிரை கவர்வதும், கரந்தை சூடி ஆனிரை மீட்பதும் பண்டைத் தமிழரின் போர்முறை எனப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கணநூல் கூறுகிறது.

வஞ்சி - எதிரி நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் பொழுது அணிவது
தும்பை - போர் செய்ய செல்லும் போது அணிவது

உதாரணத்திற்கு, ராமனும் ராவணனும் போருக்குக் கிளம்புகையில் தும்பை மலர் அணிவதாகக் கம்பராமாயணம் கூறுகிறது.

நொச்சி - கோட்டை மதிலைத் தாக்கும் பொழுது அணிவது

நெடுங்கிள்ளியின் உறையூர் கோட்டையை நலங்கிள்ளி முற்றுகையிட்டபோது நொச்சி மலரைப் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது.

வாகை - போரில் வெற்றி பெற்றவர் அணிவது

இதன் வழியாகவே "வெற்றிவாகை சூடினார்" என்ற கூற்று இன்றளவும் வழங்கப்படுகிறது.

போருக்கு மட்டுமல்ல, பக்திக்கும் மலர்களே பிரதானமாகத் திகழ்கின்றன. மலர் மாலைகளைக் கொண்டு இறைவனை அடைந்த "சூடித் தந்த சுடர்க்கொடி" ஆண்டாளின் வாழ்வு பற்றிய செய்திகளே இதற்குச் சான்றாகும்.

இன்றும் கூட, இறைவழிபாட்டில் மலர்கள் முக்கிய இடம் பெறுகின்றன. மலர்கள் அணியும் வழக்கம் பெண்களிடத்தில் இன்றும் காணப்படுகிறது. மேலும், பிரபலங்களை மலர்மாலைகள் அணிவித்து வரவேற்கும் வழக்கம் தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்வாறு, மலர்களையும் தமிழர்களின் வாழ்வியலையும் பிரிக்க முடியாது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu