2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி 2019-ம் ஆண்டு மே மாதம் 2-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றார். அவரது பதவிக் காலம் 2024-ம் ஆண்டு முடிகிறது. இந்நிலையில், 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. கரோனாவால் கடும் பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டிருந்த சூழலில் நடப்பு நிதி ஆண்டுக்கான (2022-23) பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.
தற்போது, ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் காரணமாக பணவீக்கம் உச்சம் அடைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபடி இருக்கிறது. இவற்றின் விளைவாக சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காணப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை தீவிரமடைந்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி குறையும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்த நெருக்கடியான சூழலில், 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்படுவதால் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்டாக இது உள்ளது.
பட்ஜெட் தொடர்பான முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது. வெவ்வேறு அமைச்சகம் மற்றும் துறைகளுடன் மேற்கொள்ளப்படும் இந்தக் கூட்டங்கள் நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெறும். நிதி மற்றும் செலவினத் துறை செயலர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டங்களின் அடிப்படையில் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உருவாக்கப்படும்.