மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, ரயில்வே துறை, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த 3 ஆண்டுகளுக்குள், இந்தியாவின் முக்கிய ரயில் நிலையங்களில், மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும். முதல் கட்டமாக, 4 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள ரயில் நிலையங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், சென்னை, கொல்கத்தா, புனே, சூரத் ஆகிய பெருநகர ரயில் நிலையங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக, டிசம்பர் 2025 ஆம் ஆண்டுக்குள், 1 மில்லியன் பயணிகளை கொண்ட நகர ரயில் நிலையங்கள் மற்றும் 4 மில்லியனுக்கும் கூடுதலான பயணிகளைக் கொண்ட பெருநகர ரயில் நிலையங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்கும் பணி நிறைவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, மின்சார மயமாக்கப்பட்ட ரயில் நிலையங்கள் அனைத்திலும் சார்ஜிங் மையங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றும், டிசம்பர் 2026 ஆம் ஆண்டுக்குள் இந்த பணி செய்து முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சார்ஜிங் மையங்கள், மண்டல ரயில்வேயின் பட்ஜெட் ஒப்புதல் பெற்று, நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சார்ஜிங் மையங்கள் அமைத்து தரும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, ஒப்பந்த அடிப்படையில் ரயில் நிலைய சார்ஜிங் மையங்களை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் நிறுவனங்கள், சார்ஜிங் மையங்களை ரயில் நிலையங்களில் அமைத்துக் கொண்டு, அதற்கான வாடகையை ரயில்வே துறைக்கு செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வேயின் சொந்த பயன்பாட்டுக்காக உபயோகிக்கப்படும் இன்டர்னல் கம்பஷன் (ஐ சி) என்ஜின் கொண்ட வாகனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு நிலையை எட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.