அமீரகத்தை சேர்ந்த நோரா அல் மாத்ருஷி என்ற பெண், நாசாவின் விண்வெளி வீரர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இந்த பயிற்சியை நிறைவு செய்து விண்வெளி வீராங்கனையாக பட்டம் பெற்ற முதல் அரபு நாட்டுப் பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
நோரா அல் மாத்ருஷி, சிறுவயதிலிருந்தே விண்வெளிப் பயணம் மேற்கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார். அவரது ஆசிரியர் மூலம் அவருக்குள் இந்த கனவு விதைக்கப்பட்டதாக கூறியுள்ளார். இயந்திர பொறியாளராக எண்ணெய் தொழில்துறையில் பணியாற்றி வந்த இவர், 2021 ஆம் ஆண்டு, அமீரகத்தில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தால் நாசாவின் பயிற்சி திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டார். இரண்டு ஆண்டுகள் நாசாவில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்ட இவர், தற்போது நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட தயார் நிலையில் உள்ளார். மேலும், செவ்வாய் கிரகத்துக்கும் அவர் அனுப்பப்படலாம் என கூறப்படுகிறது. மனித இனம் நிலவை தாண்டி செல்வதற்கு, தான் பணியாற்ற உள்ளதாக அல் மாத்ருஷி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.