கடந்த 2024 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் நேரடி வரி வசூல் பட்ஜெட் இலக்கை விட 7.4% உயர்வை பதிவு செய்துள்ளது.
கடந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் 18.23 லட்சம் கோடி அளவில் நேரடி வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில் 19.58 லட்சம் கோடி ரூபாய் அளவில் நேரடி வரி வசூல் கிடைத்துள்ளது. அதன்படி, நேரடி வரி வசூல் 7.4% உயர்வாக வசூல் ஆகியுள்ளது. இதுவே, கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில் வசூலிக்கப்பட்ட நேரடி வரி வசூலுடன் ஒப்பிடுகையில் 17.7% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் நிதி ஆண்டில் வசூல் செய்யப்பட்ட மொத்த நேரடி வரி 23.37 லட்சம் கோடியாகும். திருப்பிச் செலுத்தப்பட்ட வரித்தொகையை கழித்து 19.58 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. இதில், தனி நபர் வருமான வரி வசூல் 10.4 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25.23% உயர்வாகும். கார்ப்பரேட் வரி வசூல் முந்தைய ஆண்டை விட 10.26% உயர்ந்து 9.11 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருப்பிச் செலுத்தப்பட்ட வரி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22.74% உயர்ந்து 3.79 லட்சம் கோடியாக உள்ளது.














