ஐடிசி நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் லாபம் 50.20 பில்லியன் ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 17571.72 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.4% சரிவாகும். ஐடிசி நிறுவனத்தின் எபிட்டா மார்ஜின் 70 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 37.2% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, நிறுவனத்தின் ஒரு பங்குக்கு 7.5 ரூபாய் டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. டிவிடெண்ட் தொகை வரும் ஜூலை 29 முதல் 31 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐடிசி குழுமம் சார்பில் பல்வேறு வர்த்தகங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில், சிகரெட் வர்த்தகத்தில் இருந்து கிடைத்த வருவாய் 7% உயர்ந்து 8689 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐடிசி நிறுவனத்தின் சில்லறை வணிகம் அல்லது எஃப் எம் சி ஜி வணிகம் மூலம் 5308 கோடி ரூபாய் வருவாய் பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 7% உயர்வாகும்.