கேரளா அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுமலை சின்னாறு சோதனைச் சாவடியில் வருகிற 26 ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளதாக திருப்பூர் மாவட்ட விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அமராவதி அணையின் உயரம் 90 அடி. இது 4 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் அமராவதி ஆற்றபடுதல் மூலம் 110 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அணையின் முக்கிய நீர் ஆதாரமாக கேரள மாநில மூணார் பகுதியில் உள்ள பாம்பாறு உள்ளது. இந்த நிலையில் இடுக்கி மாவட்டம்,தேவிகுளம் தாலுகா, வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பெருகடா என்னும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுகிறது. இதனை கண்டித்து வருகிற 26 ஆம் தேதி உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் வழியில் உள்ள சின்னாறு சோதனை சாவடியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் எல்லை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது














