ஏர் இந்தியா நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் சார்ந்த துறையின் தலைவராக ஹென்றி டனோஹோ நியமிக்கப்பட்டுள்ளார். டாடா குழுமம், சமீபகாலமாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த வகையில், ஹென்றியின் நியமனமும் உள்ளடங்கும் என்று கருதப்படுகிறது. வரும் நவம்பர் 7ஆம் தேதி முதல், அவர், ஏர் இந்தியாவில் பணிகளைத் தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரிஷ் நாட்டை சேர்ந்த ஹென்றி டனோஹோ, விமானப் போக்குவரத்து துறையில் பல ஆண்டு அனுபவம் உள்ளவர். கடந்த 1978 ஆம் ஆண்டு, ஏர் லிங்கஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு, பல ஆண்டுகள் அனுபவத்திற்கு பின்னர், தலைமை விமானி, பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயஅதிகாரி போன்ற பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அத்துடன், எமிரேட்ஸ் ஏர்லைனிலும் 7 ஆண்டுகள் பணி செய்துள்ளார். அண்மையில், அவர், நார்வேஜியன் ஏர் நிறுவனத்தில் பாதுகாப்பு மற்றும் அவசர கால சேவைகள் துறையில் பணி செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது நியமனம் குறித்து பேசிய ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேம்பெல் வில்சன், “ஏர் இந்தியா நிறுவனம், விஹான் என்ற செயற்கை நுண்ணறிவு திறனில் இயங்கும் விமானப் போக்குவரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. எனினும், விமான போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் தரம் ஆகியவையே நிறுவனத்திற்கு முதல் குறிக்கோள் ஆகும். டாடா குடும்பத்தில் இயங்கும் மூன்று விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் இதன் அடிப்படையிலேயே செயல்பட்டு வருகின்றன. இதற்கான அடுத்த நிலையாக ஹென்றியின் நியமனம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.