ஏமன், லெபனான், காசா பகுதிகளில் இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தியது.
காசா மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானார். சிலர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இதற்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் ஏமன், லெபனான் மற்றும் காசா மீது திடீரென கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.
ஏமனின் துறைமுக நகரமான ஹுட்டைடா மீது இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இங்கு உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கு, மின் நிலையம், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுத கிடங்கு உட்பட பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று பேர் பலியாகி உள்ளனர். 87 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதேபோல் லெபனானில் அட்லோன் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுத குழுவின் ஆயுதக் கிடங்கு மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் மூன்று பேர் காயமடைந்தனர். அதேபோல் காசாவில் நஸ்ரத் முகாம், ரஃபா போன்ற பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஹமாஸ் ஆயுத குழுவினர் உட்பட 39 பேர் பலியாகினர். இவ்வாறு ஒரே நேரத்தில் மூன்று பகுதிகளில் இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.














