இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, டர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் இருந்து போயிங் விமானங்களை குத்தகைக்கு எடுக்க திட்டமிட்டு இருந்தது. இதற்காக, இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. சுமார் இரண்டு வருட காலத்திற்கு விமானங்களை குத்தகைக்கு எடுக்க விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆறு மாத காலத்திற்கு விமானங்களை குத்தகைக்கு எடுக்க டிஜிசிஏ ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்து டிஜிசிஏ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “நீண்ட கால குத்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நீண்ட கால அடிப்படையில் வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவில் செயல்படுவதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமாக, தற்போது, குறுகிய அளவிலான விமானங்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அகலமான விமானங்களை இயக்க இன்டிகோ நிறுவனம் முடிவு செய்தது. மேலும், விமான என்ஜின் தயாரிப்பாளர்களிடம் இருந்து விமானங்கள் கிடைப்பதிலும் தொடர்ந்து தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், டர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்களை குத்தகைக்கு எடுக்க நிறுவனம் முடிவு செய்தது. தற்போது, குத்தகைக்கு, மூன்று மாத காலத்திற்கு மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசம் மேலும் மூன்று மாதம் வரை மட்டுமே நீட்டிக்க படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும், 4 போயிங் 777 விமானங்களை சர்வதேசப் பயணத்திற்கு குத்தகை எடுக்க, இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.