இந்திய அரசின் இணைய வர்த்தக தளமான ஒஎன்டிசி (ONDC), பெங்களூருவில் தனது செயல்பாடுகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில், வரும் வாரம் முதல், பெங்களூரு மக்களுக்கு, பிற நகரங்களில் உள்ள பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தளவாட சேவைகளை வழங்கும் பிரபல நிறுவனமான ஷிப்ரோகெட், ஓஎன்டிசி உடன் இணைந்துள்ளது. தற்போது, இந்த நிறுவனம் ஓஎன்டிசி யில் பரிசோதனை முறையில் செயல்பட்டு வருகிறது. மேலும், விநியோக சேவைகளை விரிவு படுத்த பிளிப்கார்ட் நிறுவனத்தின் தளவாட நிறுவனமான இ-கார்ட் நிறுவனமும் ஓஎன்டிசி உடன் இணைந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, பெங்களூருவில் 28 பின்கோடுகளில் இருந்து சுமார் 1388 ஆர்டர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 70% மளிகை பொருட்கள் சார்ந்ததாகவும், 30% உணவு மற்றும் பானங்கள் சார்ந்ததாகவும் இருந்தன. அதே வேளையில், 25 வாடிக்கையாளர் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. டன்சோ மற்றும் லோடு ஷேர் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, இந்த ஆர்டர்களுக்கான குறுகிய தூர விநியோகங்களை ஒஎன்டிசி செயல்படுத்தி வருகிறது. மேலும் விரிவாக்கம் செய்யப்படும் பட்சத்தில், உத்தரப்பிரதேச மாநில அரசின் ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் பொருட்கள், பெங்களூர் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ஓஎன்டிசி யின் தலைமை செயல் அதிகாரி கோஷி, “தற்போது, கிராஃப்ட்ஸ்வில்லா, ஸ்பைஸ் மணி, மை ஸ்டோர், பேடிஎம், ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகிய 5 நிறுவனங்கள் ஒஎன்டிசி இல் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் முதல் மூன்று நிறுவனங்கள் மூலம், கைவினைப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றின் விற்பனை தொடங்கப்படுகிறது. விரைவில், மின்னணு சாதனங்கள், ஆடைகள், உணவுகள் போன்றவையும் அறிமுகம் செய்யப்படும்” என்றார். மேலும், ஒஎன்டிசி தளம், டெல்லியில் நவம்பர் மாதம் முதல் பரிசோதனை அடிப்படையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிப்ரோகெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாகில் கோயல், “சில தினங்களுக்கு முன்பிருந்து, ஒஎன்டிசி செயல்பாடுகளில் பரிசோதனை முறையில் பங்கு பெற்று வருகிறோம். தற்போது உத்தரப்பிரதேசத்தில் இருந்து பெங்களூருவுக்கு பொருட்களை கொண்டு சேர்க்க உள்ளோம். இந்தியாவில் உள்ள 19000 பின்கோடுகளில், சுமார் 100 மில்லியன் விநியோகங்களை திறம்பட செய்து முடித்துள்ளோம்” என்றார்.