இந்தியா மற்றும் மேலும் 10 நாடுகளைச் சேர்ந்த விமானப்படைகள் இணைந்து ஒரு பிரமாண்டமான கூட்டுப் பயிற்சியை ஆகஸ்ட் 7 தேதி கோவையில் தொடங்கியுள்ளன. ‘தாரங் சக்தி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சியில் 75 முதல் 80 இந்திய விமானங்கள் உட்பட மொத்தம் 140 போர் விமானங்கள் பங்கேற்கின்றன. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த பயிற்சியில் 18 நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். முதல் கட்ட பயிற்சி ஆகஸ்ட் 14 வரை கோவையில் நடைபெறும். இரண்டாம் கட்ட பயிற்சி ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 12 வரை ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடைபெறும். விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் ஏ.பி.சிங் பேசியபோது, நட்பு நாடுகளின் விமானப்படைகளுடன் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தவும், சிறந்த பயிற்சிகளை பகிர்ந்து கொள்ளவும், பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தவும் இந்த கூட்டுப் பயிற்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.