தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு, கடந்த 1996 ஆம் ஆண்டு அறிமுகமானது. அதிலிருந்து, முதல் முறையாக தொடர்ச்சியாக 12 அமர்வுகளாக உயர்வடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் போது 25268 என்ற அளவுக்கு நிஃப்டி உயர்ந்தது. எனினும், இன்றைய வர்த்தக நேர முடிவில் 25235.9 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் நிஃப்டி தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இதற்கு முன் கடந்த 2007 அக்டோபரில் 11 நாட்களாக தொடர் உயர்வை நிஃப்டி பதிவு செய்திருந்தது. இந்த உயர்வை பற்றி நிபுணர்கள் கூறுவதாவது: “பொதுவாக நீண்ட நாள் உயர்வுக்குப் பிறகு எதிர்மறையான வருவாய் நேரலாம். உதாரணமாக, 2006 மே மாதத்தில் 9 நாட்கள் நீடித்த உயர்வுக்குப் பிறகு 24% வீழ்ச்சி பதிவானது. எனினும், எதிர்கால சந்தை இயக்கம், பொருளாதார குறியீடுகள், விலைவாசி அறிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பு தரவுகளை பொறுத்து சந்தையில் மாற்றங்கள் ஏற்படும்” என பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.