ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரன், பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து ராஞ்சியில் நடைபெறும் விசாரணையில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம், சுமார் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றத்தில், முதல் குற்றவாளியாக ஹேமந்த் சோரனுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் பங்கஜ் மிஸ்ரா அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்போது, முதலமைச்சர் ஹேமந்த் சோரனும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளார். அவர் நேரில் ஆஜராக உள்ளதால், அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜார்கண்ட் காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கங்களில் சட்டவிரோதமாக கற்கள் எடுத்ததில் மிஸ்ரா பெரும் பங்கு வகித்துள்ளார். அத்துடன், அது தொடர்பான கட்டமைப்புகள் ஏற்படுத்துவதிலும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். சுமார் 42 கோடி ரூபாய் மதிப்பில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சருக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளதால், அவர் பதவியில் நீடிப்பது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. எனவே, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பது போன்ற குரல்கள் எழுப்பப்பட்டுள்ளன. இது குறித்து சட்ட வல்லுநர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.