ட்விட்டர் நிறுவனத்தைப் போன்ற சமூக ஊடகச் சேவையை ‘கூ’ என்ற சமூக வலைத்தளம் வழங்கி வருகிறது. இது இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தியதை தொடர்ந்து, ட்விட்டர் தளத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல தரப்பினர் வாதிட்டு வருகின்றனர். இந்நிலையில், அதன் போட்டியாக கருதப்படும் கூ சமூக வலைத்தளம் பேசு பொருள் ஆகியுள்ளது. முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு, இந்தியாவில் ட்விட்டருக்கு எதிர்ப்பலைகள் ஏற்பட்டபோது, இந்த வலைத்தளம் வெளிச்சத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இந்த சமூக வலைத்தளத்தை பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 50 மில்லியனை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அடுத்த ஒரு வருடத்தில் 100 மில்லியன் பதிவிறக்கங்களை தாண்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அப்ரமேயா ராதாகிருஷ்ணா கூறியுள்ளார். மேலும், இந்தியாவின் பல்வேறு மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்த காரணத்தால், நிறுவனம் இத்தகைய வளர்ச்சியை எட்டியுள்ளதாக தெரிவித்தார். கூ சமூக வலைத்தளம் ஆங்கிலம் மட்டுமல்லாது, தமிழ், இந்தி, குஜராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற மொழிகளிலும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில், சுமார் 7500 ஹை ப்ரோபைல் பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில் முனைவோர்கள், கவிஞர்கள், தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், நடிகர்கள் ஆகியோர் இந்த தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்கள், தங்கள் சொந்த மொழியில் பதிவுகளை பகிர முடியும் என்பதால், இந்த தளம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், இந்த தளத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து முதலீடுகளும் கிடைத்துள்ளன.