10-ம், 12-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டது
2024-2025 கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 1 தேர்வு மார்ச் 5-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடத்தப்படும். அதேபோல், 10-ம் வகுப்பு தேர்வு மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வுகளுக்கு முன், 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெறும். அதேபோல், 12-ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 9-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடக்கும். இந்த தேர்வுகளுக்கான செய்முறை தேர்வுகள் டிசம்பர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.