வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவித்துள்ளார். ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாகவே தேர்தல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அந்த அரசியல் மாற்றத்திற்கு ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதில், “இடைக்கால அரசின் சார்பில், ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாகவே பாராளுமன்றத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையரிடம் கடிதம் எழுதுவேன்” என தெரிவித்தார். இந்நிலையில், பொதுத் தேர்தல் ஏற்கனவே ஏப்ரல் மாதம் நடைபெறும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இப்போது பிப்ரவரியில் நடத்தப்பட உள்ளதாய்ப் பார்க்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகை 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 17 அல்லது 18ஆம் தேதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.














