பிரிட்டனின் மிகப்பெரிய வர்த்தக குழுமமாக ஹிந்துஜா குழுமம் அறியப்படுகிறது. இந்தக் குழுமத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நீண்ட காலமாக சண்டை நிலவி வந்தது. தற்போது, நீதிமன்ற தலையீட்டால், இந்த சண்டை நிறைவு பெற்று, ஹிந்துஜா குழுமத்தின் வணிகம் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கித் துறை, ரசாயனத் துறை, சுகாதாரத்துறை போன்ற பல துறைகளில் ஹிந்துஜா குழுமம் வணிகம் செய்து வருகிறது. சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிறுவனத்தில் பணி செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 33 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த குழுமத்திற்கு ஜெனிவா வங்கி மீதான உரிமை கோருவதில் குடும்ப சண்டை ஏற்பட்டது. ஹிந்துஜா குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதரர்களும் இந்த வங்கியின் உரிமையைக் கோரினர். இதன் காரணமாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2014 ஆம் ஆண்டு, ‘குழுமத்தின் சொத்துகளில் அனைவருக்கும் சமமான பங்கு உண்டு’ என போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ரத்தானதால், இதுவரை ஒற்றை தலைமையின் கீழ் இயங்கி வந்த ஹிந்துஜா குழுமத்தின் வணிகம், தற்போது நான்காக பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.