10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சி தலைவர்கள் பேசினர். கூட்டத்தின் முடிவில் 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தை அதிமுக, பாஜக கட்சிகள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.