உலகின் நீண்ட சொகுசு கப்பல் பயணம் இந்தியாவில் தொடங்கப்பட உள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் சொகுசு கப்பல் சேவை இயக்கப்படும் என்று துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தெரிவித்துள்ளார்.
‘கங்கா விலாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சொகுசு கப்பல், உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் தொடங்கி, அசாம் மாநிலத்தின் திப்ருக்கா வரை, சுமார் 4000 கிலோ மீட்டர் தூரம் செல்ல உள்ளது. மேலும், இந்தியாவின் 50க்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்களை 50 நாட்கள் பயணத்தில் இந்த கப்பல் பயணம் கடக்க உள்ளது.
ஜனவரி 10ஆம் தேதி வாரணாசியில் தொடங்கும் பயணம், மார்ச் ஒன்றாம் தேதி திப்ருக்காவை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளை இணைக்கும் சுற்றுலா பயணமாக பார்க்கப்படுகிறது. கங்கா மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகளின் வழியே செல்லும் இந்த சொகுசு கப்பல் பயணம், வங்கதேசத்தில் 1100 கிலோமீட்டர் தூரம் வரை பயணிப்பது குறிப்பிடத்தக்கது.