44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேற்று பிரம்மாண்டமாக சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து போட்டிகள் இன்று பிற்பகல் 3 மணி அளவில் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டில் தொடங்குகிறது.
போட்டியில், மொத்தம் 700 டிஜிட்டல் செஸ் போர்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த தொடர் மொத்தம் 11சுற்றுகளை கொண்டது. வீரர்களின் ஆட்டத்தை இணையதளம் வழியாக கண்டுகளிக்கலாம்.
ரஷ்யா மற்றும் சீனா இந்தத் தொடரில் கலந்து கொள்ளவில்லை. இதனால் அனைவரது எதிர்பார்ப்பும் அமெரிக்கா மீது திரும்பியுள்ளது.அந்த அணியில் உள்ள 5 வீரர்களில் 4 பேர், உலகத் தரவரிசையில் 14 இடங்களுக்குள் உள்ளனர். வலுவான வீரர்களை கொண்ட அந்த அணி 7-வது முறையாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக உள்ளது.
விதித்குஜ்ராத்தி, ஹரிகிருஷ்ணா, அர்ஜுன் எரிகைசி, எஸ்.எல். நாராயணன் மற்றும் கே. சசிகிரண் ஆகியோர் இந்தியாவின் ஏ குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.
குகேஷ், நிஹால்சரின், ஆர். பிரக்ஞானந்தா. ரவுனக் சத்வானி மற்றும் பி.அதிபன் ஆகியோர் இந்தியாவின் பிஅணி உறுப்பினர்கள் ஆவர். இந்த அணி அனுபவம் வாய்ந்ததாக இருப்பதால் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஒவ்வொருஅணியின் முதல் நான்கு வீரர்களின் சராசரி ரேட்டிங் புள்ளிகளை விட, சாம்பியன்ஷிப்பில் வீரர்களின் பார்ம் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. தரவரிசையில் பின்தங்கியுள்ள அதிகம் அறியப்படாத அணிகளுக்கு சில நேரங்களில் இது சாதகமாக இருக்கலாம்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கார்ல்சன் நார்வே அணிக்காக விளையாடுகிறார். கார்ல்சன் கடைசியாக 2016-ம் ஆண்டு ஒலிம்பியாட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.