வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். அதன்பிறகு இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 22, 23, 24-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.














