விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு ஆண் சிங்கம் கொண்டு வரப்படுகிறது.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, 1490 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழிலோடு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவாக அமைந்துள்ளது. பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் அனுமதி பெற்று மற்ற மாநிலத்தில் உள்ள பூங்காவில் இருந்து சிங்கங்களை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வந்தனர்.
அதன்படி விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஒரு ஆண் சிங்கம், சாலை மார்க்கமாக வாகனத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 22ம் தேதி கொண்டுவரப்படுகிறது. இந்த ஆண் சிங்கத்துக்கு பதிலாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஆண் வெள்ளை புலி, கர்நாடகா மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு தரப்படுகிறது. இதனால் வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.