தமிழக அரசின் சலுகைகள், மானியங்கள், நலத் திட்டப் பயன்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வருவாய், சமூக நலம், மின்சாரம் உள்ளிட்ட துறைகள் சார்பில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மத்திய அரசின் திட்டங்களிலும், மாநில நிதியை இணைத்து வீட்டுவசதி, ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நலத் திட்டங்களின் பயன்கள் உண்மையான பயனாளிகளைச் சென்றடையும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய ஆதார் எண்ணைப் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
அரசு திட்டங்களைப் பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசிதழில் இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெரியவர்கள், குழந்தைகள் என தனித்தனியே வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.














