பொதுமக்கள் வைப்பு நிதி, செல்வமகள் திட்டம் போன்ற சிறுசேமிப்பு திட்டங்களில், ஆதார் மற்றும் பான் எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயம் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது..ஆதார் எண்ணை சமர்ப்பிக்க தவறும் பட்சத்தில், வரும் அக்டோபர் 1ம் தேதி முதல், சிறு சேமிப்பு கணக்கு முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கு, ஜூன் 30-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு, ஆதார் எண் கட்டாயமாக கொடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 50000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்வதானால், பான் எண்ணையும் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே இந்த திட்டங்களில் முதலீடு செய்தவர்கள், செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், புதிதாக சிறு சேமிப்பு கணக்குகள் தொடங்குபவர்கள், 6 மாதத்திற்குள் ஆதார் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.