பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2009-ல் தொடங்கப்பட்ட இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் (யுஐடிஏஐ) சார்பில் மக்களுக்கு 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 134 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக பெயர், முகவரி, செல்போன் எண், 10 விரல் ரேகைகள், கருவிழிப் படலம் உள்ளிட்ட தகவல்களும் பதிவு செய்யப்படுகின்றன.
இந்நிலையில், யுஐடிஏஐ சார்பில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்றவர்கள் உடனடியாக தங்களது வீட்டு முகவரி, பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன்படி, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் பயோமெட்ரிக் தகவல்கள், விவரங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. https://myaadhaar.uidai.gov.in/ இணையதளம் அல்லது அருகில் உள்ள ஆதார் மையங்களுக்குச் சென்று, தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.