வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைப்புக்காக, ஆதார், வாக்காளர் அட்டையின் நகல்களை அளிக்க வேண்டியது இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஆதார் இணைப்புக்கான பணிகள் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியுள்ளது. இதற்கென ‘6பி’ என்ற படிவத்தையும் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. தேசிய வாக்காளர் சேவை அமைப்பான ‘என்விஎஸ்பி போர்ட்டல்’, வாக்காளர் சேவை எண் மூலமாகவும், வாக்காளர் பதிவு அலுவலரிடம் ‘6பி’ படிவத்தை பெற்று பூர்த்தி செய்தும் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக கருடா என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள், ‘6பி’ படிவத்தை அளித்து அதில் விவரங்களை பதிவு செய்வதுடன் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல்கள் மற்றும் கைபேசி எண்ணை கேட்பதாக புகார் எழுந்தது. ஆதார் இணைப்புக்கான ‘6பி’ படிவத்துக்கு ஒப்புகைச் சீட்டை அளிக்குமாறு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறுகையில், தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் இதுவரை 97 லட்சம் பேர் ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க பதிவு செய்துள்ளனர்.
மேலும், வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் பொதுமக்கள் ‘6பி’ படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களின் நகலையும் அளிக்க வேண்டியது இல்லை என்று அவர் கூறினார்.